சென்னை: போலீஸ் அதிகாரி ஒருவருடன் இணைத்து பேசிய விவகாரத்தில், தவெக நிர்வாகியும் யூடியூபருமான விஷ்ணுகுமாரை அவரது மனைவி ஒப்பனை கலைஞர் அஸ்மிதா கொடுத்த புகாரின்படி மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் விஷ்ணு குமார் என்பவர் வசித்து வருகிறார். பிரபல யூடியூபரான இவர், தற்போது தவெகவில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். நண்பர் ஒருவரின் தங்கைக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உல்லாசத்திற்கு அழைத்ததாக அவரது நண்பர்கள் சிலர், விஷ்ணுகுமாரை பார்ட்டிக்கு அழைத்து அந்த குறுஞ்செய்தியை காட்டி அடித்து உதைத்து கண்டித்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து யூடியூபரான தவெக நிர்வாகி விஷ்ணுகுமார் கடந்த ஏப்ரல் 23ம் தேதி தன்னை கடத்தி ரூ.1 கோடி பணம் கேட்டு தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதேபோல், நாங்கள் யாரையும் கடத்த வில்லை என்றும், விஷ்ணுகுமார் ஐபோனை அவரது மனைவி அஸ்மிதா தான் அனைத்து பாஸ்வேர்டு மற்றும் இன்ஸ்டாகிராம் முகப்பு பக்கங்களை மாற்றினார். இதற்கும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் புகார் அளித்தனர்.
இந்த இரண்டு புகார்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விஷ்ணுகுமார் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது மனைவி அஸ்மிதா மீது புகார் அளிக்க வேண்டாம் என்று எங்கள் வீட்டின் எதிரே குடியிருக்கும் கூடுதல் டிஜிபி ஒருவர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி அவர் மீது புகார் அளிக்கவில்லை என்றும், தனது மனைவிக்கும் கூடுதல் டிஜிபிக்கும் இடையே நட்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், விஷ்ணுகுமார் மனைவி ஒப்பனை கலைஞரான அஸ்மிதா (33) விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 2015ம் ஆண்டு முதல் விஷ்ணுகுமாரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு திருமணம் செய்து வளசரவாக்கத்தில் வாழ்ந்து வந்தோம். பிறகு 2018ம் ஆண்டு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. விஷ்ணுகுமார் மற்றும் அவரது தாய் ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்தது எனக்கு தெரியவந்தது. அதை பற்றி நான் கேட்டதால் என்னை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து எனது தாய் மற்றும் தந்தை கேட்க வந்த போது அவர்களையும் எனது கணவர் மற்றும் அவரது தாய் ஆகியோர் சேர்ந்து தாக்கினார். இதுகுறித்து 27.11.2019ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது என்னிடம் மன்னிப்பு கோரியதன் பேரில் நான் புகாரை வாபஸ் பெற்றேன். பிறகு எனது கணவர் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி என்னை கொடுமைப்படுத்தி வந்தார்.
இதனால் கடந்த 2022ம் ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் என்னை சந்தித்து தான் திருந்தி விட்டதாகவும், இனி பிரச்னை செய்யாமல் வாழ்வேன் என்றும் கூறியதால், மீண்டும் இந்து முறைப்படி 19.1.2023ம் தேதி விரும்பாக்காம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டோம். அப்போது எனது கணவர் ‘நிட்டா அர்கானிக் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். நான் ‘மேக் ஓவர்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தேன். மீண்டும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 15.4.2025ம் தேதி முதல் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், எனது கணவரான விஷ்ணு குமார் என்னையும் எனது தொழிலை பற்றியும் எனது நண்பர்கள் மற்றும் அவரது நண்பர்களிடம் தவறாக பேசி மிரட்டி வருகிறார். எனவே விஷ்ணுகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். புகாரின்படி, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விஷ்ணுகுமார் மீது பிஎன்எஸ் 296, 126(2), 117(2), 85, 316(2), 74 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர்.