விழுப்புரம்: நடிகர் விஜய் பெண்கள், மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசி, பாரம்பரிய கலாசாரத்தை சீரழித்து விட்டதாக விழுப்புரத்தில் தவாகவினரும், அதற்கு பதிலடியாக தவெகவினரும் போஸ்டர் அச்சிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அண்மையில் அரசு பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் பரிசுகளை வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஹார்டின், அம்பு விடுவது போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்ததை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியிருந்தார். இதனால் இரு கட்சி நிர்வாகிகளிடையே போஸ்டர் மோதல் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பல்வேறு முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக பெண்களின் மீதும், மாணவிகளின் மீதும் கை வைத்து தொட்டு பேசுவது தமிழர்களின் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்புடையது அல்ல.
ஆகவே அதுபோல் நடந்து கொண்டு சினிமா மாயயை வைத்து ஆட்சி கட்டிலில் உட்கார்ந்துவிடலாம் என்ற கனவு கண்டிருக்கும் தமிழக வெற்றி கழக தலைவரை கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதே போல் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட்டுக்காக தமிழக மாணவ, மாணவிகளையும், பெற்றோர்களையும் தரக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் பேசிய வேல்முருகனை கண்டிக்கிறோம் என்று பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். விழுப்புரம் நகரில் முக்கிய இடங்களில் இரு கட்சிகளும் தலைவர்களை கண்டித்து மாறி மாறி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.