*குறைதீர்வு கூட்டத்தில் மக்கள் கோரிக்கை
சித்தூர் : தவனம்பள்ளி அடுத்த ஏ.கொல்லப்பள்ளி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், நேற்று சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. சித்தூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி இணை கலெக்டர் ஸ்ரீநிவாசிடம் அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட இணை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களுக்கு உறுதி அளித்தார். இதில், மொத்தம் 127 பேர் மனுக்கள் அளித்தனர்.
தவனம்பள்ளி அடுத்த ஏ.கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆகவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட இணை கலெக்டர் ஓரிரு வாரத்திற்கும் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தாார்.
அதேபோல் ஏராளமான பொது மக்கள் சுடுகாட்டுக்கு வழி வேண்டும் என்றும், குடிநீர் வசதி வேண்டுமென்றும், மின்சார வசதி செய்து தர வேண்டும் என்றும், வீட்டு மனைபட்டா வேண்டும் என்றும், ரேஷன் கார்டு வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி இணை கலெக்டரிடம் வழங்கினர். இதில் டிஆர்ஓ ராஜசேகர் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.