கோத்தகிரி: கோத்தகிரி -மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முள்ளூர், மாமரம், மேல்தட்டப்பள்ளம், கீ ழ்தட்டப்பள்ளம் ஆகிய பகுதிகள். தற்போது இங்கு பலாப்பழம் சீசன் துவங்கியுள்ள நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைக் கூட்டம் தேயிலைத் தோட்டங்கள்,சாலையோர வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் காய்ந்து இருந்த புல்வெளிகள்,செடிகள் அனைத்தும் நன்கு வளரத்தொடங்கியுள்ளன.
இதன் காரணமாக பகல் நேரங்களில் நிலவும் இதமான காலநிலையில் வனப்பகுதியில் இருந்து யானைக் கூட்டம் வெளியேறி சாலையோரங்களில் உள்ள வனப்பகுதியில் குட்டிகளுடன் உலா வருகிறது. எனவே பகல் மற்றும் இரவு நேரங்களில் தேயிலைத் தோட்டங்கள், சாலைகளில் உலா வருவதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்,வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.யானைக்கள் இது போன்று உலா வரும் நிலையில் வனத்துறையினர் யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் யானைக் கூட்டம் முகாமிட்டு உள்ள பகுதிகளில் சுற்றுலா வருவோர் மற்றும் வாகன ஓட்டிகள் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பது அவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.