மதுரை: எய்ம்ஸ் பற்றி எப்போது கேட்டாலும் ஒரே பதிலை ஒன்றிய அரசு அளிப்பதாக கூறி மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் எம்பி கூறியதாவது: நாடாளுமன்றத்தில் விதி எண் 377வது பிரிவின் கீழ் மதுரை எய்ம்ஸ் பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், கவுண்டமணி- செந்தில் நகைச்சுவையைப் போல, ‘அந்த வாழைப்பழந்தான் இது’ என்பது போல பதில் அளித்துள்ளார். 2015-16ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டம், 7 ஆண்டுகளாகியும் கட்டுமான பணி துவங்கப்படவே இல்லை. செப்.2022ல் முடிந்திருக்க வேண்டிய கட்டுமானப் பணி தற்போது அக்.2026 வரை ஆகும் என கூறப்பட்டுள்ளது.
உங்கள் திட்டம் என்ன? எத்தனை சதவீத பணி முடிந்துள்ளது? கால வரையறை வரைபடத்தை (பார் சார்ட்) தர இயலுமா? என கேட்டதற்கு அமைச்சர், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் சொல்கிற கதையையே வரி மாறாமல் திரும்ப ஒப்பித்துள்ளார். மீண்டும் மீண்டும் கேட்டு புளித்துப் போன கதை. கடைசியில் சுற்றுச்சுவரை கடக்கவே இல்லை என்பதே கசப்பான உண்மை. தமிழ்நாட்டிற்கு நீங்கள் இழைக்கும் வஞ்சனையை உங்களின் பதில் வெட்ட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. எனது கேள்விக்கு கால வரைபடத்தை கூட தர முடியாத அளவு தோல்வி அடைந்துள்ள ஒரு அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.