டேனிஷ்காரர்களின் 2வது பெரிய கோட்டை
தமிழகப் பகுதியான தரங்கம்பாடியின் தென்பகுதியில், வங்கக் கடலை ஒட்டி அமைந்துள்ள டென்மார்க்காரர்களின் கோட்டைதான் டேனிஷ்கோட்டை என அழைக்கப்படும் டேனியக் கோட்டை. இக்கோட்டை தஞ்சை அரசரான ரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ்கெட் என்பவரால் 1616ல் ஒப்பந்தம் செய்யப்பட்டு 1620-ல் கட்டப்பட்டது. இக்கோட்டையே டேனிஷ்காரர்களின் கோட்டைகளில் இரண்டாவது பெரியகோட்டையாகும்.இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845ம் ஆண்டில் பிரிட்டானியருக்கு விற்கப்பட்டது. அதன்பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தம் சிறப்பை இழந்தன. இக்கோட்டை டேனிஷ் பாணியில், பெரிய அரங்குகள், கட்டமைப்புகள், உயர் கூரைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கடற்கரையையொட்டிய கோட்டையின் நீளம் 60 மீ (200 அடி) மற்றும் அகலம் சுமார் 11 மீ (36 அடி). கோட்டை சரிவான வடிவில் இடது புறத்தில் மூன்று அறைகளுடன் உள்ளது. இடது மூலையில் திறந்தவெளி நெருப்பு மூட்டும் இடம் மற்றும் புகைப்போக்கியுடன் சமையலறையும் உள்ளது.
கோட்டையின் மையத்தில் இருந்த தேவாலய அறை தற்போது அருங்காட்சியகமாக செயல்படுகிறது. வலப்பக்க மூலையில் வணிக இயக்குநரின் வசிப்பிடமாக இருந்த அறை தற்போது கிடங்காக உள்ளது. கோட்டையின் முதன்மை வாயில் வடக்கு நோக்கி உள்ளது. கிழக்கிலும் ஒரு வாயில் கூடுதலாக உள்ளது. கோட்டையின் இரண்டாவது மாடியில் பாதுகாவலர் அறைகளின் தொகுதிகள் உள்ளன. கோட்டையின் மையப் பகுதியில் நான்கு ஒட்டகத் திமில் வடிவ குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத் தூண்தான் குவிமாடங்களின் முழு எடையையும் தாங்குகிறது. இந்த கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டவை.கோட்டையும் அதன் குறிப்பிடத்தக்க கட்டடங்களின் தொகுப்பும் 1620-ல் கட்டப்பட்டவை. இந்தப் பகுதியின் சில குறிப்பிடத்தக்க கட்டடங்கள் என்றால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாசிலாமணிநாதர் கோயில், 1701ல் கட்டப்பட்ட சீயோன் தேவாலயம், 1718ல் கட்டப்பட்ட புதிய ஜெருசலேம் தேவாலயம், 1792ல் கட்டப்பட்ட நகர நுழைவுவாயில், 1784ல் கட்டப்பட்ட ஆளுநர் பங்களா, 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கல்லறைகள் உள்ளன. கோட்டையின் உள்ளே உள்ள குடியிருப்புகளின் வாயில் மற்றும் முக்கிய தெருக்களுடன் மரக் கதவுகள் கொண்ட ஒரு சிறிய ஐரோப்பிய நகரம் போன்ற தோற்றத்தில் உள்ளது.
அதாவது, ராஜ வீதிபோல உள்ளது. இந்த ராஜ வீதியில் கேட் ஹவுஸ், முகில்ட்ரூப் மாளிகை, போர்ட் மாஸ்டர் பங்களா, ரிகிலிங் மாளிகை போன்ற சில குறிப்பிடத்தக்க கட்டடங்கள் உள்ளன. இங்கு கடல் நோக்கி கோட்டையின் சுவர்கள் இருந்ததால், இங்கிருந்த உப்புக்காற்றுச் சூழல் கோட்டையை அரித்தது. ஆதலால் அவ்வப்போது சுவர்களை வலுவூட்டவேண்டி இருந்தது. கோட்டைச் சுவர்கள் கருங்கல் கொண்டு கட்டப்பட்டன.இந்தியா விடுதலையான 1947க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978 வரை பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன் பிறகு தமிழகத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்த டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டை 2000ம் ஆண்டுக்கு பின் இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001ல் டேனிஷ் மன்னர் குடும்பத்தின் உதவியுடன் மாநில தொல்லியல்துறை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. அடுத்து 2011ல் தமிழக சுற்றுலாத் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இக்கோட்டை முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது.