சென்னை: ஆன்லைன் நிறுவனங்களில் டெலிவரி பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைப்படும் என அறிவித்தமைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து டெலிவரி ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர். சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, இணைய வழி சேவை நிறுவனங்களின் வாயிலாக உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான கிக் தொழிலாளர்கள் சந்தித்தனர். தங்களது நலனை பாதுகாக்கும் விதமாக தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். ‘‘நலவாரியம் மூலமாக 1.50 லட்சம் ஊழியர்கள் பலனடைவார்கள்.
எங்களுக்கு விபத்து நிகழ்ந்தாலோ அல்லது குறைகளை கூற வேண்டும் என்றாலோ நேரடியாக நிர்வாகத்தினை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்தோம். தற்போது நலவாரியம் மூலமாக எங்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம். அதேபோல, ஆட்டோ, கால்டாக்சி, சரக்கு வாகனங்களை இணைத்து அரசு ஒரு செயலியை தொடங்க உள்ளதாக முதல்வர் எங்களிடம் தெரிவித்தார்’’ என உணவு டெலிவரி ஊழியர்கள் கூறினர். இதற்கிடையில், ‘அமைப்பு சாராத கிக் தொழிலாளர்களின் நலன் காக்கத் தனி நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்தமைக்கு பல தரப்பினரும் பாராட்டி நவிலும் நன்றியால் நெகிழ்கிறேன்’ என டிவிட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.