அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் 18வது மெயின்ரோடு பகுதியில் மெட்ரோ பணியால் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுவந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் திருமங்கலம் போலீசாரிடம் கோரிக்கை வைத்தபோது, ‘’பொது வழியை திறக்கவேண்டும். அவசரத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம். குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்வதற்கு வழி இல்லாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டியது உள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமம் கருதி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்தனர்.
இதுசம்பந்தமாக போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘’மெட்ரோ பணிகள் முழுவதுமாக முடியாமல் பொது வழியை திறக்கக்கூடாது என்றும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாதபடி சிக்னல் அமைத்த பிறகு பொதுவழி திறக்கப்படும்’ என்றனர்.இந்தநிலையில் மெட்ரோ பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிக்னலைபோக்குவரத்து கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் நேற்று திறந்துவைத்தார். இதில், அண்ணாநகர் போக்குவரத்து துணை ஆணையர் ஜெயகரன், உதவி ஆணையர் ரவி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரந்தாமன் உள்பட பலர் இருந்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது;
கடந்த 2 வருடமாக பொதுவழியை அடைத்துவைத்திருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மெட்ரோ பணிகள் முடிந்துள்ள நிலையில் புதிய சிக்னல் அமைத்துள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று பொது வழியை திறந்ததால் பிரச்னை இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு கூறினர்.