ஒரத்தநாடு: கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை வாங்க மறுத்த பெண் எஸ்ஐயை ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சாவூர் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடை சேர்ந்தவர் 22வயதான பி.எஸ்.சி., பட்டதாரி பெண். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், விடுமுறையில் கடந்த 12ம்தேதி ஊருக்கு வந்துள்ளார். தனியாக வீட்டில் இருந்த அவரை அதேபகுதியை சேர்ந்த கவிதாசன்(25), நண்பர்கள் திவாகர்(27), பிரவீன்(20), மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், பாப்பாநாடு காவல் நிலைய பெண் எஸ்ஐ சூர்யாவிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் புகாரை வாங்க மறுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதா, 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கவிதாசன் உட்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்நிலையில் பாப்பாநாடு பெண் எஸ்ஐ சூர்யா, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை வாங்க மறுத்த தகவல் தெரிய வந்ததால் அவரை ஆயுதபடைக்கு மாற்றி எஸ்.பி ஆசிஷ்ராவத் நேற்று உத்தரவிட்டார்.