ஒரத்தநாடு: தஞ்சாவூர் அருகே நாட்டு வெடி தயாரிக்கும்போது பட்டாசு ஆலை வெடித்து சிதறிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். பட்டாசு ஆலை நடத்திய பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்த சர்புதீன் என்பவர் விழாக்களில் பயன்படுத்தப்படும் வெடிகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். பிறகு அவரது மகன் அப்பாஸ் என்பவர் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டார். தற்போது அப்பாஸ் வெளிநாட்டில் உள்ளார். இவரது சகோதரி சமரத் பீவி (47).
இவரது மகன் முகமது ரியாஸ் (19) ஆகியோர் நெய்வேலி தென்பகுதியில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில், பட்டாசு ஆலை வைத்து நடத்தி வந்தனர். இதில் பட்டாசு மட்டுமின்றி சணல் கொண்டு செய்யப்படும் நாட்டு வெடியை மறைமுகமாக தயாரித்து கோயில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல, முகமது ரியாஸ், அங்கு பணியாற்றும் சுந்தரராஜன் (60) உள்ளிட்ட 5 பேர் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சாப்பிட்டுவதற்காக முகமது ரியாஸ், சுந்தரராஜன் தவிர மற்ற 3 பேரும் வெளியில் சென்று விட்டனர். முகமது ரியாஸ், சுந்தரராஜன் ஆகியோர் வெடி தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடி வெடித்து சிதறியது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்து முகமது ரியாஸ், சுந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விபத்து குறித்து வி.ஏ.ஓ., பழனிவேல் புகாரின் பேரில், வாட்டாடத்திக்கோட்டை போலீசார் உரிமையாளர் சமரத்பீவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், நாட்டு வெடி தயாரிக்க இடம் வாடகைக்கு கொடுத்த உரிமையாளர் அண்ணாதுரையை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து குறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில், ‘அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயார் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வருவாய்த்துறை, போலீசார் மூலம் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் பட்டாசு குடோன்கள் கண்காணிக்கப்படும். இடத்தின் உரிமையாளர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.