தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேல வீதியில் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட அய்யன்குளம் உள்ளது. பராமரிப்பின்மை காரணமாக நீர்வரத்து இன்றி மிக மோசமான நிலையில் இருந்த இக்குளம் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது. இதில் குளம் தூர்வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், நடைபாதையோரம் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க நீர்வழிப் பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அய்யன்குளம் பொலிவு நகர திட்ட கலாச்சார விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செப்டம்பர் 27ம் தேதி வழங்கப்படுகிறது.