தஞ்சை: செங்கிப்பட்டி பாலத்தில் மே 21ம் தேதி நடந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி தாஷி (7) உயிரிழந்தார். தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி மேம்பாலத்தின் மேலே தார் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் மேம்பாலத்தில் இருபுறமும் செல்லும் வாகனங்கள் தற்போது ஒரு வழிப்பாதையில் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 21ம் தேதி இரவு தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
செங்கிப்பட்டி மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதையில் செல்லும் பொழுது எதிரே கர்நாடகாவில் இருந்து தஞ்சை நோக்கி வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் பேருந்து மற்றும் வேனில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு, பேருந்து மற்றும் வேனில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்து மற்றும் வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி தாஷி (7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.