தஞ்சாவூர் : தஞ்சாவூர், அய்யம்பேட்டையில் பரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி இரண்டு வருடமாக தலைமறைவாகி இருந்த உரிமையாளரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, தலைமறைவாக உள்ள அவரது மனைவியைத் தேடிவருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை நந்தவனம் கே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் ஹக்கீம்(42). இவர், தஞ்சாவூர் அய்யம்பேட்டை மெயின் ரோடு கோயில் பகுதியில் பரிணா டூர் அண்ட் ட்ராவல்ஸ் நிறுவனத்தை, கடந்த 2018ம் முதல் 2022 வரை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் ஒரு பகுதி தருவதாக ஹக்கீம் மற்றும் அவரது மனைவி பாத்திமா நாச்சியார் (37) ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரது நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், கடந்த 2022ல் ஹக்கீம், அவரது மனைவி பாத்திமா நாச்சியார் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்து க்கொண்டு தலைமறைவாகினர். இதுகுறித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து தேடிவந்தனர். ஆனால், தற்போது இந்த வழக்கு தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, வழக்கை காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தார்.
இந்த நிலையில், ஹக்கீம் கோயம்புத்தூர் ராஜராஜேஸ்வரி நகரில் பதுங்கி இருப்பதாக தனிப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் செந்தமிழன் மற்றும் தலைமை காவலர்கள் அசோக் மற்றும் பிரபாகரன் நேரில் சென்று ஹக்கீமை கைது செய்து, தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவிற்கு அழைத்து வந்து விசாரித்தனர். மேலும், அவரை போலீசார் நேற்று மதுரை பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மனைவி பாத்திமா நாச்சியாரைத் தேடி வருகின்றனர்.