தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்து இருக்கும் நிலையில் மழையால் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகள் நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசு துரிதமாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. அந்த மாவட்டத்தில் 238 கொள்முதல் நிலையங்கள் மூலம் 17% ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மழை விட்டுவிட்டு பெய்வதால் நெல்மணிகளை காய வைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பூண்டி, சாயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல்மணிகளை சாலையில் கொட்டி காயவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. விட்டுவிட்டு மழை பெய்து வரும் நேரத்தில் அரசு தங்களின் நிலை உணர்ந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை தளர்வு செய்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.