தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை அருகில் உள்ள தளவாய் பாளையம் வெங்கடேஸ்வர நகரில் பூட்டி கிடந்த வீட்டின் பூட்டை கடந்த 17ம்தேதி 29வயதான வாலிபர் ஒருவர் உடைக்கும் போது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அந்த வாலிபரை அம்மாபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம் மணக்காடு கோனிமேடு குப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுமன் (29) என்பதும், பூட்டி கிடந்த வீட்டில் திருட வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சுமனை கைது செய்தனர். பின்னர் போலீசார், சுமனை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த சுமன் நேற்று அதிகாலை தப்பியோடியுள்ளார். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்ததாக தலைமை காவலர் மதுசூதனன், காவலர் கார்த்திகேயன், ஆயுதப்படை காவலர் பிரம்மா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தஞ்சாவூர் எஸ்பி ஆசிஷ்ராவத் உத்தரவிட்டார்.