ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா நெய்வேலி தென்பாதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(60). இவர் நாட்டு வெடி தயாரித்து திருமணம், காதணி மற்றும் திருவிழாக்களுக்கு விற்பனை செய்து வந்தார். இதற்காக அதே பகுதியில் ஒரு கான்கிரீட் கட்டிடத்தை குடோனாக பயன்படுத்தி வெடிகளை சேமித்து வைத்திருந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரியாஸ்(18) வேலை பார்த்தார். இன்று காலை சுந்தர்ராஜும், ரியாசும் வெடிகளை எடுக்க குடோனுக்குள் சென்றனர். அங்கு எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டு வெடிகள் வெடித்து சிதறின. இதில் குடோன் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி சுந்தர்ராஜ், ரியாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்து ேபாலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்டாசுகள் வைக்க பயன்படுத்தப்பட்ட குடோன் முறையான அனுமதியின்றி செயல்பட்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.