*தடைக்காலம் முடிந்து 3 நாட்களுக்கு பின் செல்வதால் உற்சாகம்
பேராவூரணி : தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 3 நாட்களுக்கு பின் இன்று (19ம்தேதி) அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனர்.
மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வந்தது.
தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டத்தில் உள்ள 140 விசைப்படகுகள் கரையில் ஏற்றப்பட்டு படகுகளுக்கு வர்ணம் பூசுதல், இன்ஜின் பழுதுபார்த்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்குப் பின்மீன்பிடிக்கச் செல்ல தேவையான வலை, மீன்பிடி சாதனங்களை படகில் ஏற்றி, படகுகள் கடலில் இறக்கப்பட்டு கடலுக்கு செல்ல தயார் நிலையில் இருந்தனர்.
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் கடலுக்கு செல்லவேண்டும் என்ற விதி உள்ளதால், தடைக்காலம் ஜூன் 14 (சனிக்கிழமை) நள்ளிரவு நிறைவடைந்ததால் ஜூன் 16 (திங்கள்கிழமை) அதிகாலை செல்லலாம் என மீனவர்கள் இருந்த நிலையில், தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும், 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை மண்டல ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதால் திங்கள்கிழமையும் கடலுக்கு செல்லவில்லை. கடல் பகுதியில் தற்போது சகஜ நிலை திரும்பியுள்ளதால் தடைக்காலம் முடிந்து 3 நாட்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள் இன்று (18ம் தேதி) அதிகாலை மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.