சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2006-11 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது 2012-ல் வழக்கு தொடரப்பட்டது. 2022-ல் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருவரையும் விடுவித்ததற்கு எதிராக 2023-ல் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். தினசரி விசாரணை நடத்த வேண்டும்; செப். 11 ஆம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறினார்.