Sunday, March 16, 2025
Home » தங்கச்சிமடத்டில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தங்கச்சிமடத்டில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by MuthuKumar

சென்னை: தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களான இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசகர் என். தேவதாஸ் மற்றும் பாய்வா, ஏ.பி. முருகன். தங்கச்சிமடம் அனைத்து விசைப்படகு நாட்டுப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா, பொருளாளர் ஆர். சகாயம், இணை செயலாளர் பி. ஆல்வின், பாம்பன் நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. ராயப்பன், நிர்வாகி ஆரோக்கிய தீபக், மண்டபம் அனைத்து விசைப்படகு சங்க நிர்வாகிகள் ஜாகீர் உசேன், வாசீம், விஜின் ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், மீனவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதையும் தடுத்திட ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட மீனவப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, தமிழ்நாடு முதலமைச்சர், மீனவ சமுதாய மக்களின் கோரிக்கையினை ஏற்று 18-8-2023 அன்று மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் பங்கேற்றபோது அளிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, அது தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை அந்த மாநாட்டிலேயே அறிவித்தார்கள். அந்த அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில், மீனவ மக்களுக்கான கூட்டுறவு கடன் திட்டத்தின் கீழ் 77,402 நபர்களுக்கு 1,198.79 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 6,242 மீனவர்களுக்கு வீடுகளுக்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது, மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத்தொகை ரூ.8000/- மாக உயர்த்தப்பட்டு, 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் உட்பட 1.80 இலட்சம் மீனவ குடும்பங்களுக்கு 143 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, மீன்பிடி படகுகளுக்கான மானிய விலையிலான டீசல் விசைப்படகுகளுக்கு 18,000 லிட்டரிலிருந்து 19,000 லிட்டராகவும், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டரிலிருந்து 4,400 லிட்டராகவும் மற்றும் மண்ணெண்ணெய் 3,400 லிட்டரிலிருந்து 3,700 லிட்டராகவும் உயர்த்தப்பட்டு நடப்பாண்டில் வழங்கப்பட்டுள்ளது.

மீன்பிடி படகுகளுக்கு 1,000 வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீனவர் குழு விபத்துக் காப்புறுதி திட்டம் செயல்பாட்டில் இல்லாத காலகட்டத்தில் இறந்த 205 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் சுழல் நிதியமாக ரூ 3.53 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது ரூ. 1.70 இலட்சத்திலிருந்து ரூ. 2.40 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்றும்; அதேபோன்று, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் முக்கிய கோரிக்கைகளான தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய திட்ட செயல்பாட்டிற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும்; அதன் அடிப்படையில், இதுபோன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையிலும், தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ஏதுவாக கடலோர மேலாண்மை திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இப்பிரச்சனையில் நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டுமென்று பலமுறை ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதோடு, தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மீனவர்கள் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களிடம் 16.2.2025 அன்று இராமநாதபுரத்தில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுடன், தற்போது முதலமைச்சரிடம் இன்றையதினம் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடற்பாசி வளர்த்தல், மதிப்புக்கூட்டிய மீன் பொருட்கள் தயாரித்தல், ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விரைந்து பரிசீலிக்க துறை அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மீனவர்களின் உற்ற தோழனாக விளங்கும் திராவிட மாடல் அரசு. தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், தங்களது பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டுவருவதற்காக தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இச்சந்திப்பின்போது, மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், மாநில மீனவர் அணிச் செயலாளர் டாக்டர் ஜோசப் ஸ்டாலின், துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ராமவன்னி ஆகியோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

18 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi