Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தண்டராம்பட்டு அருகே மலைக்கு விஷமிகள் தீ வைப்பு ஆட்டு கொட்டகை எரிந்து 9 ஆடுகள் கருகி பலி

தண்டராம்பட்டு : மலைக்கு விஷமிகள் வைத்த தீ பரவி ஆட்டு கொட்டகை எரிந்து 9 ஆடுகள் கருகி பலியானது. தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(48). இவர் சொந்தமாக 13 ஆடுகளை வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில், இவர் வளர்த்து வரும் ஆடுகளுக்காக கொலமஞ்சனூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் மலை அடிவாரத்தில் கொட்டகை அமைத்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் ஏழுமலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து மதியம் வெயில் அதிகமாக இருந்ததால் ஏழுமலை ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு, மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றார்.

இதற்கிடையில் மர்ம நபர்கள் மலைக்கு தீ வைத்துள்ளார். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென தீ பரவி எரிந்து கொண்டிருந்த நிலையில், அருகே இருந்து கொட்டகைக்கும் தீ பரவியது. கொட்டகை மஞ்சம் புல்லால் அமைந்திருந்ததால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில் கொட்டகையில் இருந்து 9 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தது.

4 ஆடுகள் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பியது. அதன் பின்னர் அங்கு வந்த ஏழுமலை கொட்டகை முழுவதும் எரிந்து ஆடுகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து தானிப்பாடி கால்நடைத்துறைக்கும், போலீசார், கிராம நிர்வாக அலுவருக்கும் தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் அங்கு வந்த அதிகாரிகள், போலீசார் மலைக்கு தீ வைத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆடுகள் உயிரிழந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளார்.