தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் ஒவ்வொரு வார்டுகளிலும் ஒரு நாள் முழுவதும் மாஸ் கிளீனிங் என்ற பெயரில் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் சுத்தம் செய்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.கே. நகர், பெரம்பூர் ஆகிய தொகுதியில் மொத்தம் 14 வார்டுகளும், ராயபுரம் தொகுதியில் ஒரு வார்டும் என மொத்தம் 15 வார்டுகள் தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ளன.
மாஸ் கிளீனிங் என்ற பெயரில் இந்த வார்டுகளில் சாலையோரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குப்பை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை சுகாதார ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் ஒன்றுகூடி பொக்லைன் இயந்திரம் உதவியுடன் செய்து வருகின்றனர். அதன்படி ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் ஒரு நாளைக்கு ஒரு வார்டு என்ற பெயரில் சுத்தம் செய்து வருகிறார்கள். இதன் மூலம் மாநகராட்சி வார்டுகள் சுத்தமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி விஸ்வநாதன் கூறும்போது, ‘‘தொடர்ந்து மாஸ் கிளீனிங் என்ற பெயரில் இதுபோன்று பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தினால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரமான மாநகராட்சியாக தண்டையார்பேட்டை மண்டலம் அமையும். தற்போது ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் 6 வார்டுகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக மற்ற வார்டுகளும் சுத்தம் செய்யப்படும். மேலும் தொடர்ந்து சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வாகனங்களை நிறுத்தி வைத்தால் அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.