தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் கஞ்சா போதையில் எஸ்ஐயை தாக்கிய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் அடுத்த மூலக்கடை அண்ணா நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (56). ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 4 சிறுவர்களை பிடித்து விசாரித்துள்ளார். அவர்கள், உதவி ஆய்வாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த 4 பேரும், உதவி ஆய்வாளர் பாலமுருகனை தாக்கிவிட்டு தப்பினர். இதில் அவரது இடது நெற்றி, வலது கன்னம், மூக்குதண்டு ஆகிய இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த பாலமுருகனை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 4 தையல் போடப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலமுருகனை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் பாலமுருகனை தாக்கிய சிறுவர்களை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பிய சிறுவர்களை தேடி வந்தனர். இன்று காலை தண்டையார்பேட்டை நேதாஜிநகரில் பதுக்கியிருந்த 4 சிறுவர்களையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2 பேர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவதும், 2 பேர் ஊர்சுற்றி வருவதும் கஞ்சா போதையில் எஸ்ஐயை தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.