ஐதராபாத் : தெலங்கானா தேர்தலுக்கான காங்கிரசின் வாக்குறுதிகளை கடந்த மாதம் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர். அதில், மகாலட்சுமி என்ற திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும். சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500-க்கு விற்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனையோடு ரூ. 5 லட்சம். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. இந்தநிலையில், காங்கிரசின் வாக்குறுதிகளை நகலெடுத்தது போல் பல அறிவிப்புகளை ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி சார்பில் முதல்வர் சந்திரசேகரராவ் நேற்றுமுன்தினம் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார். இந்த நிலையில், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் ஸ்ரீதர்பாபு நேற்று நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளோடு பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 10 கிராம் தங்கம் கொடுக்கும் திட்டமும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அதே போல் மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி திட்டம் குறித்த அறிவிப்பும் இடம் பெறும் என்று தெரிவித்தார்.