ஆலயம்: ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனர் (பொ.ஆ. 1111-1141).
காலம்: கீர்த்தி நாராயணர் ஆலயம், தலக்காடு, (மைசூரிலிருந்து 45 கி.மீ.), கர்நாடக மாநிலம். சில நூற்றாண்டுகளாக மணல் மூடியதால் ஒரு மறக்கப்பட்ட நகரமாக இருந்த தலக்காடு, பின்னர் அகழ்வாராய்ச்சிகளின் மூலம் இப்பகுதி ஆலயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
கங்க மன்னர்களின் (பொ.ஆ 350-999), தலைநகராக விளங்கிய தலக்காடு, தென்னிந்தியாவின் பெரும் அரச வம்சங்களான சோழ, ஹொய்சாள, விஜயநகர வரலாறுகளுடன் பின்னிப் பிணைந்து சிறப்பிடம் பெற்று, இன்று மணல் சூழ்ந்த அழகிய ஆலயங்களுடன் சிற்றூராக காட்சியளிக்கிறது.கங்கர்களிடமிருந்து பொ.ஆ. 1004ல் ராஜராஜ சோழரால் கைப்பற்றப்பட்டு ‘ராஜராஜபுரம்’ என்று பெயரிடப்பட்ட தலக்காடு, ஏறத்தாழ 100 ஆண்டுகள் கழித்து ஹொய்சாளர் வசம் வந்தது.
சோழர்கள் மீதான ஹொய்சாளர் வெற்றியை கொண்டாட விஷ்ணுவர்த்தனரால் (பொ.ஆ. 1111-1141) கட்டப்பட்டதே இவ்வழகிய ‘கீர்த்தி நாராயணர் ஆலயம்’. ஹொய்சாளர் பாணியில் நட்சத்திர வடிவ அடித்தளத்துடன் அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.பின்பு, விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாய் விளங்கிய தலக்காட்டில் உள்ள கங்க, சோழ, ஹொய்சாளர் ஆட்சிகளில் கட்டப் பட்ட பழம்பெரும் ஆலயங்களை விஜயநகர ஆட்சியாளர்கள் புனரமைத்துள்ளனர்.
இப்பகுதியின் கடைசி விஜயநகர ஆட்சியாளரான ரங்கராயரின் மறைவுக்குப்பின் மைசூர் உடையார்கள் தலக்காட்டை கைப்பற்றினார். ரங்கராயரின் அரசி ‘அலமேலம்மா’விடமிருந்த ஏராளமான ஆபரணங்களை அபகரிக்க மைசூர் உடையார் வீரர்களை அனுப்பினார். அவர்களிடமிருந்து தப்பிய அரசி காவிரியில் குதித்து உயிர் விட்டார்.‘‘தலக்காடு பகுதியை மணல் மூடட்டும்… மைசூர் மன்னர் வம்சம் வாரிசு அறுந்து போகட்டும்!’’ என்ற அரசியின் சாபத்தினாலேயே இப்பகுதியும், கோயில்களும் மணலால் மூடப்பட்டிருப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
இவ்வாலயங்கள் மணலால் மூடப்பட்டதற்குக்காரணம், காவிரி ஆறு இயற்கையாக தன் போக்கை மாற்றியதனாலா?அல்லது அரசியின் சாபம் காரணமாகவா என்பதற்கு விடை காண முயலுகையில் மைசூர் மன்னர் குடும்பத்தினரின் சந்ததியினர், பெரும்பாலும் தத்தெடுத்த வாரிசுகளுடனே உள்ளனர் என்ற தகவலும் கூடவே கிடைப்பது வியப்பளிக்கிறது.
மது ஜெகதீஷ்