Wednesday, February 21, 2024
Home » கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் களைகட்டிய வீர விளையாட்டுகள்: சிறுவர் முதல் பெரியவர் வரை உற்சாகமாக பங்கேற்பு

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் களைகட்டிய வீர விளையாட்டுகள்: சிறுவர் முதல் பெரியவர் வரை உற்சாகமாக பங்கேற்பு

by Karthik Yash

சென்னை: தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு வரலாற்றில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனி இடமே உண்டு. இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மக்கள் தங்கள் நன்றியினை உரித்தாக்கும் விதமாகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் இந்நன்னாளில் அதிகாலையிலே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, புது பானையில் பொங்கல் விட்டு, கரும்பு, மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு சகிதம் சூரியனுக்கு படைத்து செய்யும் சிறப்பு வழிபாடு அனைத்து இல்லங்களிலும் நடைபெற்றது.

இவ்வுலகில் உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு, இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினர். வாசலில் தோரணங்கள், விடியற் காலை முதலே பெண்கள் வீடுகளில் பல வண்ண வண்ண கோலங்களை போட்டு தை திங்கள் முதல் நாளான நேற்று முன்தினம், தை மகளை வரவேற்றனர். அதேபோன்று விருந்தினர்களை வரவேற்கும் வகையில் வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அதிகாலையிலேயே குளித்து முடித்து புத்தாடைகளை அணிந்து கொண்டாடினர்.

பிறகு புதுப்பானையில் புத்தரிசியிட்டு சர்க்கரை பொங்கல் வைத்தனர். அப்போது பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பினர். சமைத்த உடன் பொங்கலுடன் பழங்கள், காய்கறிகள் வைத்து சூரிய பகவானை வணங்கினர். இதையடுத்து மக்கள் அனைவரும் மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்தனர். இதேபோன்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழாக்கள் களை கட்டியது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் போட்டிகளில் பங்கேற்று தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர்.

தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாடுபிடி வீரர்கள் களம் இறங்கி காளைகளை அடக்கி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். இதனால் காலை முதல் இரவு வரை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பொங்கல் போட்டிகளால் களை கட்டியது. பொது வெளியில் மக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இந்த திருவிழாக்கள், சமத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதாக இருந்தது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் கடந்த 4 நாட்களாகவே பேருந்துகளிலும், ரயில்களிலும் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கலை மக்கள் கொண்டாடுகின்றனர். இதனால் சுற்றுலா தலங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் என்பது சங்கத் தமிழனின் தேசியத் திருவிழா, வீசிய விதையின் வேரில் முளைத்த வியர்வைப் பூக்களின் இயற்கைத் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாகத் தைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாடுகள் கட்டும் தொழுவத்தைச் சுத்தம் செய்து, கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம், சலங்கை கட்டினர். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டினர். சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மாடுகள் மற்றும் காளைகளை வளர்ப்பவர்கள் நேற்று காலை, மாடுகளை மெரினா கடற்கரைக்கு கூட்டிச்சென்று குளிப்பாட்டி அலங்கரித்து பூஜை செய்தனர்.

You may also like

Leave a Comment

11 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi