Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தைலாபுரத்தில் நாளை நடக்க இருந்த பாமக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து: ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி, அருளுக்கு அழைப்பு இல்லை

திண்டிவனம்: தைலாபுரத்தில் பாமக செயற்குழு கூட்டம் கடைசி நேரத்தில் திடீர் ரத்து செய்யப்பட்டதால் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி மோதல் கடுமையாக இருந்தது. அதிமுக, பாஜக அணியில் அன்புமணியும், சசிகலாவுடன் கூட்டணி அமைத்து ராமதாசும் போட்டியிட்டனர். இதில் ராமதாஸ் அணி வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்காமல் தோல்வியடைந்தனர். அன்புமணி தரப்பில் 4 பேர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டனர். இதன் பின்னர் சில நாட்களுக்கு முன் தைலாபுரம் வந்த பாமக தலைவர் அன்புமணி, நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்த போது கட்டித்தழுவி கண்ணீர் வடித்தார். பாமகவில் இருந்த பிளவு ஒன்றுபட்டதாக பாமகவினர் கூறினர். ஆனால் ராமதாசுக்காக உடன் நின்ற செயல் தலைவர் ஸ்ரீகாந்தி தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராமதாஸ் தரப்பில் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நாளை(12ம் தேதி) அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிலைய செயலாளர் முத்துக்குமரன், ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவர் ஜிகே மணி, துணை பொதுச் செயலாளர் சேலம் அருள் ஆகியோருக்கு இதற்கான அழைப்பு இல்லை. மேலும் ராமதாஸ் அணியினரை அன்புமணியுடன் இணைக்கும் முயற்சியாகவே இந்த செயற்குழுக் கூட்டம் அவசர அவசரமாக கூட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் அன்புமணி, சௌமியா அன்புமணி மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ள இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கு ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ராமதாஸ் தரப்பு பொதுச்செயலாளர் முரளி சங்கர் முகநூல் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மனசாட்சியின் குரல்… கடந்த சில நாட்களாக நடந்துவரும் அரசியல் நிகழ்வுகளை மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் கவனித்து வருகிறேன். நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனக்கும் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை நான் மதிக்கிறேன். ஆனால், ஒரு விஷயம் என் மனதை அதிகமாகப் பாதித்தது. செயல்தலைவராக அய்யாவின் நேரடி விருப்பத்தாலும், கட்டளையாலும் பொறுப்பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரவு பகலாக இயக்கத்திற்காக உழைத்த ஸ்ரீகாந்தி அக்காவுக்கு அந்த கூட்டத்திற்கு அழைப்பு இல்லை என்பதே அந்த வேதனை.

ஒருவரை நம்பிக்கையுடன் பொறுப்பில் அமர்த்தி, அவரை இயக்கத்தின் முகமாக மக்களிடம் அறிமுகப்படுத்தி, அவர் அந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடன் செய்து முடித்த பிறகு, அந்தப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் அவருக்கே இடமில்லாத ஒரு சூழ்நிலை உருவாகும்போது, அது என்னைப் போன்ற பல தொண்டர்களின் மனதில் ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. “அன்புமணி அவர்களோடு எளிதாகச் செல்லக்கூடிய அரசியல் வாய்ப்பு இருந்தபோதும், அய்யாவின் அழைப்பை மதித்து அவரோடு நின்ற சேலம் அருள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்களுக்கெல்லாம் அரணாகவும், ஸ்ரீகாந்தி அக்காவுக்கு உறுதுணையாகவும் இருந்தார். இன்று அவருக்கே அழைப்பு இல்லை என்பது வேதனையை இன்னும் அதிகப்படுத்துகிறது. எனவே, இந்தச் சூழ்நிலையில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வது என் மனசாட்சிக்கு சரியாகத் தோன்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது செயற்குழு கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.