சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6 அபூர்வ வகை ‘‘பிளாக் காலர்ட் ஸ்டார்லிங்’’ பறவைகள் உயிரிழந்தது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் வந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த பயணியின் பெட்டியை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், துணிகளுக்கு இடையே கூண்டு ஒன்று இருந்தது.
அதனை வெளியே எடுத்துப் பார்த்தபோது 6 அபூர்வ வகை ‘‘பிளாக் காலர்ட் ஸ்டெர்லிங்’’ பறவைகள் மயங்கிய நிலையில் இருந்தது. பறவையின் கழுத்தைச் சுற்றிலும் கருப்பு நிறமும், கண்ணை சுற்றிலும், மஞ்சள் நிறமாக மிகவும் அழகாக காட்சியளித்தன. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வன உயிரினங்கள் பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த அதிகாரிகள், இது வெளிநாட்டில் வாழும் அபூர்வ பறவைகள்.
குறிப்பாக தெற்கு சீனா, தாய்வான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த பறவை இனம் அதிகமாக காணப்படும். இந்தியாவில் இந்தப் பறவைகள் கிடையாது. இந்தியாவில் மைனா என்ற பறவை இனம் இருப்பது போல், இதுவும் வெளிநாட்டு மைனா ரகத்தை சேர்ந்தது. பறவைகளை கூண்டில் அடைத்து உடமைகளுக்கு அடியில் மறைத்து கொண்டு வந்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்த அந்த 6 பறவைகளையும் பாதுகாப்பாக கொண்டு சென்று அழித்தனர். மேலும், பறவைகளை கடத்தி வந்தது தொடர்பாக சென்னை பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.