பாங்காக், மே 15: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென், முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், அயர்லாந்தின் நாட் நெகுயென் உடன் மோதினார். முதல் செட்டை போராடி இழந்த சென், 2வது செட்டை எளிதில் கைப்பற்றினார். இருப்பினும், 3வது செட்டில் சுதாரித்த நெகுயென் போராடி வசப்படுத்தினார். அதனால், நெகுயென், 21-18, 9-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் ரஜாவத், இந்தோனேஷியா வீரர் ஃபர்கான் உடன் மோதினார். இப்போட்டியில், முதல் செட்டை ஃபர்கானும், 2வது செட்டை ரஜாவத்தும் கைப்பற்றினர். 3வது செட்டை ஃபர்கான் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 21-13, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்ற ஃபர்கான் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில், தாய்லாந்து வீராங்கனை தமோன்வான் நிதிடிக்ராய்யை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப், 21-16, 20-22, 22-20 என்ற செட் கணக்கில், ஜப்பான் வீராங்கனை கவோரு சுகியாமாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.