பாங்காக்: தாய்லாந்தின் புதிய பிரதமராக பெடாங்டன் ஷினவத்ரா நேற்று பதவியேற்றார். தாய்லாந்து நாட்டில் கடந்த ஏப்ரலில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. பிரதமர் ஸ்ரெட்டா தவிசின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையில் இருந்த பிக்சிட் என்பவருக்கு அமைச்சர் பதவி வழங்கினார். இது தொடர்பான வழக்கை விசாரித்த அரசியலமைப்பு நீதிமன்றம் ஸ்ரெட்டா தவிசினை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் பெடாங்டன் ஷினவத்ரா(37) பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை பெற்றதால் அவர் பிரதமராக தேர்வு பெற்றார்.பெடாங்டன் ஷினவத்ரா பிரதமராவதற்கு மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து பாங்காக்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெடாங்டன் ஷினவத்ரா பிரதமராக பதவியேற்றார்.பெடாங்டன் ஷினவத்ரா தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன் பெடாங்டன்னின் அத்தை யிங்லக் ஷினவத்ரா பிரதமராக இருந்துள்ளார்.
மேலும் இளம் வயதில் பிரதமராகும் முதல் நபர் இவர்தான். பெயு தாய் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தக்சின் ஷினவத்ராவுக்கு தொடர்பு உடைய கட்சிகளே பெரும்பாலும் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் முவ் பார்வர்டு கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் அந்த கட்சி மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததால் ஆட்சி அமைக்க ராணுவத்தால் பரிந்துரைக்கப்பட்ட செனட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த கட்சி ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து பெயு தாய் கட்சி வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது.