சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் இவ்விருது விடுதலை போராட்ட வீரர்கள் சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, கி.வீரமணி மற்றும் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், 2025ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’க்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காதர் மொகிதீன், மனிதநேய பண்பாளர், பழகுவதற்கு இனிமையானவர், ஆரம்ப காலம் முதலே மனிதநேயத்துக்கும் மதநல்லிணக்கத்துக்கும் தம்மை அர்ப்பணித்து கொண்டு செயலாற்றியவர். இளம்வயது முதல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சிறுபான்மையின முஸ்லிம்களின் உரிமைக்காக நாடாளுமன்றம் வரை குரல் கொடுத்தவர். 80 வயதை கடந்தும் தொய்வில்லாமல் சமுதாய பணி ஆற்றிவரும் காதர் மொகிதீன் இவ்விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்.