‘‘பவர்புல் அதிகாரியின் பெயரை சொல்லி கல்லா கட்டும் ஜில்லாக்களால் விழி பிதுங்கி நிற்கிறாங்களாமே அதிகாரிங்க..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தின் பவர்புல் அதிகாரிக்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டவரும், உதவியாளரும் கல்லா கட்டுவதில் ஜில்லாவாக செயல்பட்டு வருகிறார்களாம்.. ஆய்வுக்கு செல்லுமிடத்திலும், அரசு நிகழ்ச்சிகள், கூட்டங்களிலும் துறை அதிகாரிகளிடமே அதிகார தோரணையில் கை நீட்டுவதால் புலம்பி வருகிறார்களாம்.. பாதுகாப்புக்கு செல்பவரும் இதற்கு விதிவிலக்கு இல்லையாம்.. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நங்கூரம்போல் கோலோச்சி இருப்பதால் தங்களின் அதிகாரத்தை வைத்து கல்லா கட்டுவதில் கறாராகி விட்டார்களாம்.. இதன் உச்சகட்டமாக பவர்புல் அதிகாரியின் பெயரை சொல்லியும், சிபாரிசுக்கு சென்றும் கரன்சியை கறக்கிறார்களாம்.. இதை மேலிட கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் துறை அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்.. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் இருவரையும் சுழற்சி முறையில் மாற்றியமைத்தால்தான் நல்லது நடக்கும்னு அதிகாரிகள் மனதிற்குள் புலம்புவதுதான் மாவட்டத்தின் ஹைலைட்டா ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சிக்கு ஆள் பிடிக்க ரெண்டு பார்ட்டிகளும் சீக்ரெட்டா வலை வீசுவது தெரியுமா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி தலைவரான சேலத்துக்காரருக்கும், மலராத கட்சியின் மவுண்டன் லீடருக்கும் வார்த்தை போர் உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டிருப்பது ஊரறிஞ்ச விஷயம். இதற்கு இலைகட்சிகாரங்க கடும் கண்டனத்தை தொடர்ந்து தெரிவிச்சுகிட்டே இருக்காங்க.. ஆனால், மலராத கட்சியின் நிர்வாகிகளோ, முடிந்த அளவு ஆக்ரோஷம் காட்டாமல்தான் இருக்காங்களாம்.. இதற்கு மவுண்டன் தலைவர் மேல் இருக்கும் அதிருப்தியும் ஒரு காரணமாம்.. இது ஒரு புறமிருக்க, அடுத்தடுத்த நாட்களில் இருதரப்புக்குமான முட்டல் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருக்காம்.. இதற்கு ரெண்டு கட்சிகளும் சீக்ரெட்டா நடத்தும் ஆள்பிடிப்பு மூவ்மென்ட்டும் ஒரு முக்கிய காரணமாம்.. தாமரையில் இருந்து இலைக்கும், இலையில் இருந்து தாமரைக்கும் சில நிர்வாகிகளை இழுக்கும் முயற்சிகளை, ரெண்டு தரப்பும் சைலண்டா செஞ்சிக்கிட்டு இருக்காம்.. இதில் தாமரையில் இருந்து இலைக்கு தாவுவதற்கு தான் சிலர் தயாராக இருக்காங்களாம்.. இலையில் இருந்து ஒருத்தரும் தாமரையின் வலையில் சிக்கவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரமாக இருக்காம்.. இந்த விஷயம் மவுண்டன் தலைவரின் காதுக்கும் போயிருக்காம். இதனால் அடுத்து எப்படி பாயலாம் என்று யோசிக்கிறார் மவுண்டன் லீடரு என்கின்றனர் விவரம் அறிந்த சீனியர் பார்ட்டிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சின்னமம்மியின் சகோதரர் பேட்டியால் டெல்டாவில் உள்ள மாஜி அமைச்சர்களை கண்காணிக்கிறதாமே சேலத்துக்காரர் டீம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம், கடலோரம், மனுநீதிசோழன் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இலை கட்சியை சேர்ந்த மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த சின்னமம்மியின் சகோதரருடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகம் சேலத்துக்காரருக்கு தீர்ந்த பாடில்லையாம்… தொடர்ந்து அவர்களை சந்தேக கண்ணோட்டத்தில்தான் பார்த்துட்டு வர்றாராம்.. ஒரு பக்கம் சேலத்துக்காரர் டீம் கூட அவர்களது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனராம்..
இந்த கண்காணிப்புக்கு இடையில் மன்னர் மாவட்டத்தில் சின்னமம்மியின் சகோதரரின் பேட்டியில் கூட இலைகட்சி ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கும். 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் இலை கட்சி ஒருங்கிணைப்பு நடந்துடும்னு தெரிவிச்சிருக்காரு.. தற்போது இவரது வெளிப்படையான பேட்டி மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதால் ஒருவேளை இலை கட்சி இணைப்பு திரைமறைவில் நடக்கிறதா என்ற சந்தேகமும் சேலத்துக்காரருக்கு தற்போது வந்து விட்டதாம்…
தொடர்ந்து, முதற்கட்டமாக, டெல்டாவை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை நேரிடையாக அழைத்து வெளிப்படையாகவே சேலத்துக்காரர் பேச முடிவு செய்துள்ளாராம்… இந்த டாப்பிக் தான் டெல்டா மாவட்டத்தில் இலைகட்சிக்குள்ளே பரவலாக பேசப்பட்டு வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜெயில்ல விளையுறத சேல்ஸ் செஞ்சி, உயர் அதிகாரிகளுக்கு பிரிச்சு கொடுக்குற காக்கி மேல புகாராமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலுக்கும், ஜெயிலுக்கும் பேமஸ் ஆன வெயிலூர் ஜெயில்ல, ஒரு பிரச்னை முடிஞ்சா, அடுத்த பிரச்னை ரெடியா இருக்குதாம்.. வெயிலூர் சென்ட்ரல் ஜெயில்ல பல முறைகேடுகள் நடக்குறதாக சிறை காக்கிகளே, ஜெயில் கண்காணிப்பாளரு, டிஐஜின்னு எல்லாருக்கும் பரபரப்பு புகார் கடிதம் அனுப்பியிருக்காங்க.. அந்த கடிதத்துல, சிறையில பணியாற்றும் ஒரு சிலரே பல குற்றங்களை செய்து வர்றாங்க.. அதையாரும் கண்டுக்கிறதே இல்லையாம்.. அதுவும் வெயிலூர் சிறையில ரொம்ப மோசடி நடக்குது.. போன 5 வருஷத்துல முதல்நிலை காவலர்களை எல்லாம் பணியிடமாற்றம் செய்ய உத்தரவு வந்ததாம்.. ஆனா, இதயம் பட நடிகர் பெயர் கொண்ட ஒரு காக்கிக்கு மட்டும் பணியிடமாற்றம் வரவே இல்லையாம்.. இவருதான் ஜெயில்ல விளையுற காய்கறிகள், மின்சாதன பொருட்கள்னு வெளி சந்தையில சேல்ஸ் செஞ்சி அதுல வர்ற லாபத்தை உயர் அதிகாரிங்களுக்கு பிரிச்சு கொடுத்து, அவரும் எடுத்துக்குறாராம்.. அதுமட்டுமில்ல, ரேஷன் பொருட்கள் மூலம் சம்பாதிச்ச 2 எல் யாருக்கு போச்சுன்னு அந்த புகார் கடிதமும் வெளிவரும்னு எழுதியிருக்காங்களாம்.. இந்த பரபரப்பு புகார் கடிதம் தான் வெயிலூர் ஜெயில் வட்டாரத்துல பரபரப்பை ஏற்படுத்தியிருக்குது..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.