ராவல்பிண்டி: டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்டில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் ங்கதேச அணி பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியியல் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசியது. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக சைம் அயூப் 56, ரிஸ்வான் 171, சவுத் ஷகீல் 141 ரன்கள் குவித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 562 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 93 ரன்களும், மொமினுல் ஹக் 50 ரன்களும், லிட்டன் தாஸ் 56 ரன்களும், மெஹிதி ஹசன் மிராஸ் 77 ரன்களும் எடுத்தனர். அபாரமாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் 341 பந்துகளில், ஒரு சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 191 ரன்கள் குவித்தார். இதன் மூலம் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலை பெற்றது.
2வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
வங்கதேச அணியின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4, ஷகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டியது வங்கதேசம். 6.3 ஓவர்களில் அதனை எட்டி வங்கதேசம் வரலாறு படைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச அணி முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்டில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் வங்கதேச அணி பெற்றுள்ளது.