சென்னை: சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான முனையம், டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று இரு பிரிவுகளாக இன்று முதல் செயல்படுகிறது. சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.2,467 கோடி திட்டத்தில், இரண்டு கட்டங்களாக கட்டுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018ம் ஆண்டில் முடிவு செய்து பணிகளை தொடங்கியது. அதில் முதல் கட்ட பணி, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் 2 (டி 2) இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதில் விமான சேவைகள், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து முழு அளவில் நடந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்டுக் கொண்டிருந்த டெர்மினல் 3 மற்றும் டெர்மினல் 4 ஆகியவை முழுவதுமாக மூடப்பட்டது. அதன்பின்பு டெர்மினல் மூன்றை இடிக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே, பழைய சர்வதேச முன்னையம் டெர்மினல் 4, நல்ல நிலையில் இருந்ததால், அதை இடிக்காமல், கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. இதை அடுத்து சர்வதேச முனையமாக இருந்த, அந்த டெர்மினல் 4, உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணி,கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, நடந்தது. இந்த புதிய உள்நாட்டு முனையம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதை அடுத்து இன்று இந்த புதிய உள்நாட்டு முனையம் செயல்பாட்டிற்கு வருகிறது.
இந்நிலையில், நேற்று புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4 ல், சோதனை அடிப்படையில், விமானங்கள் தரையிறங்குவது புறப்படுவது போன்றவைகள் நடந்தன. அந்தமானிலிருந்து நேற்று காலை சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை 10.20 மணிக்கு 148 பயணிகளுடன், சென்னை புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல்,வந்து தரை இறங்கியது. அந்தப் பயணிகளை சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.அதைப்போல், காலை 11.10 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை புதிய உள்நாட்டு முனையத்தில் இருந்து 152 பயணிகளுடன், புறப்பட்டு சென்றது. அந்தப் பயணிகளையும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.இதையடுத்து இன்று புதன்கிழமை, அதிகாலையில் இருந்து புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4, முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்தது.
சென்னை விமான நிலைய புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4 ல், ஏர் இந்தியா மற்றும் அதைச் சார்ந்த ஆலயன்ஸ் ஏர் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உள்நாட்டு முனையம் டெர்மினல் 1 ல், இண்டிகோ உள்ளிட்ட மற்ற விமான நிறுவன, உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று இரு விமானம் முனையங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு இட நெருக்கடி இல்லாமல், கூடுதல் இடவசதி கிடைக்கும். அதோடு சென்னை உள்நாட்டு விமான பயணிகளின் வசதிக்காக, மேலும் கூடுதலாக, உள்நாட்டு விமான சேவைகள் இயக்கபட உள்ளன என்றும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.