நார்தாம்டன்: இந்தியா ஏ அணியுடனான 2வது அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டி நார்தாம்டனில் கடந்த 6ம் தேதி துவங்கியது. முதலில் களமிறங்கிய இந்தியா ஏ அணி, 2வது நாளின்போது, 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 3வது நாளில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின், 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஏ, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று உணவு இடைவேளைக்குள் மேலும் 3 விக்கெட்டுகள் விழுந்தன. அப்போது அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 268. அதைத் தொடர்ந்து களத்தில் இருந்த தனுஷ் கோட்டியனும், அன்ஷுல் கம்போஜும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
தேனீர் இடைவேளையின்போது, இந்தியா ஏ, 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்திருந்தது. தனுஷ் கோட்டியன் 55, அன்ஷுல் கம்போஜ் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதனால், இங்கிலாந்து லயன்ஸ் அணியை விட, இந்தியா ஏ, 373 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கடைசி நாளான நேற்று மேலும் 52 ஓவர்கள் மட்டுமே வீசப்பட வேண்டி இருந்ததால், போட்டி டிரா ஆகும் வாய்ப்பு அதிகமாக காணப்பட்டது.