சென்னை: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி சோதிப்பதற்கான எலியாக நாங்கள் பயன்பட மாட்டோம் என்று சொல்லும் உரிமை தமிழ்நாட்டிற்கு கிடையாதா? என திமுக மாணவரணி தலைவரும், வழக்கறிஞருமான ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதிய கல்விக் கொள்கையையும், இந்தியையும் திணிக்கும் நோக்கில் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடி நிதியை தடுத்து வைத்திருக்கும் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத செயலுக்கு கடும் கண்டனங்கள்.
ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) ஒப்புதலுக்கு உட்பட்டு நிதி விடுவிக்கப்படுகிறது. அதன்படி, 2024-25ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி (60%). ஒன்றிய அரசின் அந்த பங்களிப்பினை பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024-லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான ரூ.573 கோடியை மாணவர்கள் நலன் கருதி உடனடியாக விடுவிக்கும்படி தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி முறையிட்டார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாகவே சென்று நிதியை விடுவிக்க கோரிக்கை வைக்கிறார். உரிமையாக பெற வேண்டிய நம்முடைய பங்குக்காக இத்தனை முறையிடல்கள் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏன்? ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலைக்கு தமிழ்நாட்டு மக்கள் ஏன் தள்ளப்பட வேண்டும்? நீண்ட நெடும் மொழி உரிமை போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு தக்கவைத்துள்ள இருமொழி கொள்கைக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம், மும்மொழி கொள்கையை திணிக்கும் பிரதமர் பள்ளி (PMShri) என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தத்தற்காக நிதியை தடுத்து வைக்கும் ஒன்றிய அரசின் அணுகுமுறை மிகவும் அராஜகமானது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கும் இந்த போக்கை தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். கருத்தை/பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் மனமில்லாமல், வருவாய் அதிகாரம் உட்பட பல்வேறு அதிகாரங்களை ஒன்றியத்தில் குவித்து வைத்துக் கொண்டு நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்வது உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நெருக்கடி இல்லாமல் கல்வி நிலையச் சூழல் நிலவக் கூடாது என்று ஒன்றிய அரசு கருதுகிறதா? நிதி ஒதுக்கீடு செய்வதில் என்ன பிரச்சினை? டிஜிட்டல் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டோம், பணபரிவர்த்தனை எளிதாகிவிடும், ஒரு பட்டனில் உலகம் நம் கையில் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மோடி பரிவாரங்களால்/ஒன்றிய அரசால் ஏன் உரிய நேரத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை?
அறிஞர் அண்ணா சொன்னார், “..ஒன்றிய அரசின் வேலை என்ன? நாடக மேடையில் வரும் இராஜா, மந்திரியை அழைத்து, “மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?’ என்று கேட்பானாம். அதுபோல் மாதம் ஒரு முறை மாநில மந்திரிகளை ஒன்றிய மந்திரி டில்லியில் கூட்டி “பள்ளிக்கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது? காலரா நோய் தடுக்கப்பட்டு விட்டதா?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புதான் டெல்லிக்கு இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. தற்போதுவரை டில்லியின் அணுகுமுறை மாறவில்லையே? புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை உணர்ந்து தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் அதில் இணையவில்லை.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு சமூகநீதியை அடித்தளமாக கொண்டும், தமிழ்நாட்டின் குறிப்பான தன்மைகளை கணக்கில் கொண்டும் புதிதாக ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கும் என்று அறிவித்து, முன்முயற்சியோடு செயற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுமாணவச்செல்வங்களுக்குநன்மை பயக்கும் வகையிலான கொள்கையை ஏற்று, நடைமுறைப்படுத்தி, எழுத்தறிவு விகிதம் (80%), மாணவர் சேர்க்கை விகிதம், கல்வி கட்டமைப்பு, இடைநிற்றலை குறைத்தல் என இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டிற்கு தன் மாநிலத்தின் குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வியை வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை கிடையாதா? மேலிருந்து, சர்வாதிகாரமாக இதை ஏற்றுக் கொண்டால்தான் நிதி,
இல்லையேல் கிடையாது என்று சொல்வதற்கு, இந்திய ஒன்றியம் தன்னை ஆண்டையாகவும், தமிழ்நாட்டு மக்களை அடிமையாகவும் கருதுகிறதா? புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி சோதிப்பதற்கான எலியாக நாங்கள் பயன்பட மாட்டோம் என்று சொல்லும் உரிமை தமிழ்நாட்டிற்கு கிடையாதா? திட்டமிட்டு நிதி நெருக்கடி கொடுப்பதன் வழியாக, சொந்த மக்களிடையே மாநில அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கமிருக்கிறதோ என்று ஏன் சந்தேகிக்க கூடாது?” என்று குறிப்பிட்டுள்ளார்.