லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்ற தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா, இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தி உள்ளார். அவற்றில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட 9 போட்டிகளில் வெற்றி வாகை சூடி புதிய வரலாறு படைத்துள்ளார். ஒரு போட்டியில் டிரா செய்துள்ளார்.
கடந்த 2023 முதல் 2025 வரையில், அவரது தலைமையில் தென் ஆப்ரிக்கா ஆடிய 10 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியை தழுவியது கிடையாது. இதற்கு முன், கடந்த 1926-31ம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக செயல்பட்ட பெர்சி சாப்மேன், தனது முதல் 10 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது பவுமா சமன் செய்துள்ளார். தென் ஆப்ரிக்கா அணிக்கு கேப்டனாக இதற்கு முன் இருந்த யாரும் செய்யாத வகையில், உலக கோப்பை ஒன்றை டெம்பா பவுமா பெற்றுத் தந்து தென் ஆப்ரிக்காவை உலக அரங்கில் பெருமை பெறச் செய்துள்ளார்.