கயானா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 160 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. புராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 160 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது (54 ஓவர்). அந்த அணி 36.1 ஓவரில் 97 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து திணறிய நிலையில், டேன் பியட் – நாண்ட்ரே பர்கர் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தது.
பெடிங்காம் 28, ஸ்டப்ஸ் 26, மார்க்ரம் 14, வெர்ரைன் 21, பர்கர் 23 ரன் எடுத்தனர். உறுதியுடன் போராடிய டேன் பியட் 38 ரன்னுடன் (60 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஷமார் ஜோசப் 14 ஓவரில் 4 மெய்டன் உள்பட 33 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஜேடன் சீல்ஸ் 3, ஹோல்டர், குடகேஷ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதை தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.
அந்த அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன் மட்டுமே எடுத்திருந்தது (28.2 ஓவர்). கீசி கார்டி 26, குடகேஷ் 11 ரன் எடுக்க, சக வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஜேசன் ஹோல்டர் 33 ரன்னுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் வியான் முல்டர் 4, பர்கர் 2, மஹராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். கைவசம் 3 விக்கெட் இருக்க, வெஸ்ட் இண்டீஸ் 63 ரன் பின்தங்கிய நிலையில் 2ம் நாள் சவாலை எதிர்கொண்டது.