லாகூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்ப்பது போல, இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி நேற்று முன்தினம் பரபரப்பாக இருந்தது. நீயா, நானா என கடைசி வரை சென்ற போட்டியில் இங்கிலாந்து அணி பரிதாபமாக தோற்று தொடரை விட்டே வெளியேறியது. தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில், ‘‘மிக மிக வருத்தமாக உள்ளது.
அரையிறுதிக்கான வாய்ப்பை ஆரம்பத்திலேயே இழந்து விட்டோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 351 ரன் குவித்தும் தோற்ற அதிர்ச்சியிலிருந்தே மீளவில்லை. ஆப்கன் போட்டியில் ஜோரூட் பிரமாதமாகத்தான் ஆடினார். ஆனால், இப்ராஹிம் ஜர்தான் என்ற ஒரு வீரர் வெற்றியை பறித்து, இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை தந்து விட்டார். கடைசி 10 ஓவர்களில் 113 ரன்களை விட்டுக் கொடுத்தது மிகப்பெரிய ஏமாற்றம். 4 ஓவர்களிலேயே மார்க் வுட் காயமடைந்தார். ஆனாலும், தொடர்ந்து பந்து வீசினார்.
லிவிஸ்டனும் அப்படித்தான். சிறந்த வீரர் என்ற நிலையில் இருந்த எனது பேட்டிங்கும் அணிக்கு கை கொடுக்கவில்லை. இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் நான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என நினைக்கிறேன். இருப்பினும் கேப்டன் பதவி குறித்து அணியுடன் ஆலோசித்து தெரிவிப்பேன்’’ என வருத்தத்துடன் பேட்டி அளித்தார். கடந்த சில தொடர்களாகவே மோசமாக பேட்டிங் செய்து வரும் ஜாஸ் பட்லர் ஓய்வு பெறுவதைத்தான் இப்படி சூசகமாக தெரிவிக்கிறாரா என பிரிட்டிஷ் மீடியாக்கள் பரபரப்பாக பேசி வருகின்றன.