லண்டன்: ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, பந்து வீச்சில் நம்பர் 1 வீரராக ஜஸ்பிரித் பும்ரா, 907 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில், தென் ஆப்ரிக்காவின் ரபாடா 868 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் 847 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 889 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஹேரி புரூக் 2வது இடத்திலும், நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 3ம் இடத்திலும் உள்ளனர். இந்திய அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 851 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் தொடர்கிறார். இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் அசத்தல் சதம் வெளுத்த இந்திய வீரர் ரிஷப் பண்ட், தன் வாழ்நாளில் அதிகபட்சமாக 801 புள்ளிகள் பெற்று 7ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். அதேசமயம் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், ஒரு நிலை தாழ்ந்து, 21ம் இடத்துக்கு சென்றுள்ளார்.