பர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன் -டெண்டுல்கர் டிராபியில் ஆடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரோகித்சர்மா, விராட் கோஹ்லி போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் கில் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் மோசமான பீல்டிங், பவுலிங்கால் தோற்றது. குறிப்பாக 9 கேட்ச்களை நழுவவிட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்த தவறுகளை சரி செய்து 2 வது டெஸ்ட்டில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. 2வது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. ஆனால் இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை ஒரு டெஸ்ட்டில் கூட வெற்றிபெறவில்லை என்ற ரெக்கார்டு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
இந்த மைதானத்தில் இதுவரை இந்தியா இதற்கு முன் 8 டெஸ்ட்டில் ஆடி உள்ளது. இதில் 7ல் தோல்வி அடைந்துள்ளது. 1986ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஒரு டெஸ்ட்டை டிரா செய்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியா 5 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட்டில் ஆடி ஒரு வெற்றி கூட பெறாத 5 மைதானங்கள் உள்ளன. அவற்றில் இந்த எட்ஜ்பாஸ்டனும் ஒன்று. ஏற்கெனவே முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த இந்தியாவுக்கு இந்த ரெக்கார்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இருப்பினும் பழைய மோசமான நிகழ்வுகளை மறந்து இளம் இந்திய அணி புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு 2வது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட்டில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ரன்களை வாரி இறைத்த நிலையில் அனுபவ வீரர் சிராஜ் பந்தும் எடுபடவில்லை. இதனால் இந்த டெஸ்ட்டில் பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. பும்ராவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் அறிமுக வீரராக களம் இறங்குகிறார். மேலும் ஆகாஷ் தீப்பிற்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. குல்தீப் யாதவையும் அணியில் சேர்க்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
பர்மிங்காமில் முதல் 3 நாட்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் கடைசி 2 நாளில் சுழற்பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்த முடியும். இங்கு ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் வார்னே 4 டெஸ்ட்டில் 25, நாதன் லயன் 3 டெஸ்ட்டில் 20 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்தியா ஜடேஜா, குல்தீப் யாதவ் என 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்கும் என தெரிகிறது. மறுபுறம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டிற்கு இது ராசியான மைதானமாகும். அவர் அங்கு 9 டெஸ்ட்டில் 3 சதம், 5 அரைசதம் என 920 ரன் அடித்துள்ளார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் 2 ஆண்டுக்கு பின் ரெட் பால் கிரிக்கெட்டில் களம் இறங்குவது கூடுதல் பலம் சேர்க்கிறது. அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை அளிக்கக்கூடும்.
குல்தீப் யாதவை சேர்க்க அசாருதீன் யோசனை;
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அளித்துள்ள பேட்டியில், “புதிய கேப்டன் கில்லுக்கு நியாயமாக ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் இப்போது தான் பொறுப்பேற்று இருக்கிறார். அவருக்கு நேரத்தையும் ஆதரவையும் கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் அவரை குறை கூறி விமர்சனம் செய்ய முடியாது. கேப்டனாக ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார். இதை வைத்து அவரது கேப்டன்சி பற்றியும் கூற முடியாது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாபேட்டிங் சரிவால் தோற்றது. அதனால் சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து ஆட வேண்டும். பந்துவீச்சும் சரியாக இருக்க வேண்டும். பெரிய அளவில் பும்ராவை சார்ந்து உள்ளனர். அவரை மட்டும் இந்தியா நம்பியிருப்பதை குறைக்க குல்தீப்பை சேர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
`குட்டிக்கரணம்’ வேண்டாம் ப்ரோ!
லீட்ஸ் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் சதம் அடித்ததும் ரிஷப் பன்ட் ‘சம்ர்சால்ட்(குட்டிக்கரணம்) அடித்து கொண்டாடினார். ஆனால் 2வது இன்னிங்சில் அவர் குட்டிக்கரணம் அடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன் ரிஷப் பன்ட் விபத்தில் சிக்கியபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா கூறுகையில், “பன்ட் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர். பார்ப்பதற்கு சற்று பருமனாகத் தெரிந்தாலும், அவரது உடல் நன்றாக வளைந்து கொடுக்கும். அதனால்தான் அவரால் `சம்ர்சால்ட்’ அடிக்க முடிகிறது. அவர் அதற்கு நன்கு பயிற்சி பெற்று, அதை மிகவும் சரியாகவும் செய்கிறார். ஆனால், அதை இப்போது செய்வதற்கான அவசியம் இல்லை’’ என்றார்.