லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாளில் இந்தியா 471 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில், 21 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்திருந்தது.
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் டெஸ்ட் போட்டி துவங்கிய நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 127, விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் 65 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவர்கள், அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினர். ஷொயப் பஷீர் வீசிய 100வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் விளாசிய பண்ட், அற்புதமாக சதத்தை கடந்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கில் (227பந்து, 1 சிக்சர், 19 பவுண்டரி, 147 ரன்), 102வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
பின், களமிறங்கிய கருண் நாயர், ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். அதையடுத்து, பண்டுடன் ரவீந்திர ஜடேஜா இணை சேர்ந்தார். சிறிது நேரத்தில் ஜோஷ் டோங் வீசிய ஓவரில், ரிஷப் பண்ட் (178 பந்து, 6 சிக்சர், 12 பவுண்டரி, 134 ரன்) ஆட்டமிழந்தார். 1877ம் ஆண்டு கிரிக்கெட் துவங்கி 148 ஆண்டுகளுக்கு பின், கேப்டன் மற்றும் துணை கேப்டனாக முதல் முறையாக அறிமுகமாகும் போட்டியில் சதம் விளாசிய வீரர்கள் என்ற வரலாற்று சாதனையை சுப்மன் கில்லும், ரிஷப் பண்டும் இந்த போட்டியில் நிகழ்த்திக் காட்டினர்.
அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், 113 ஓவரில் இந்தியா 471 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 7 விக்கெட்டுகள் 42 ரன்களில் பறிபோயின. இங்கிலாந்து தரப்பில், ஜோஷ் டோங், பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை துவக்கியது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஜாக் கிராவ்லி (4) ஆட்டமிழந்தார். 21 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்திருந்தது. பென் டக்கெட் 47 ரன், ஒல்லி போப் 46 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
கேப்டனாக பொறுப்பேற்று முதல் போட்டியில் சதம்
டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக அறிமுகம் ஆன முதல் போட்டியில் சதம் விளாசிய 5வது இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் அரங்கேற்றி உள்ளார். இதற்கு முன், விஜய் ஹசாரே இங்கிலாந்துக்கு எதிராகவும் (1951, 164 ரன்), சுனில் கவாஸ்கர் நியுசிலாந்து அணிக்கு எதிராகவும் (1976, 116 ரன்), வெங்சர்க்கார் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் (1987, 102 ரன்), விராட் கோஹ்லி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் (2014, 115 ரன்) கேப்டனாக பொறுப்பேற்று முதல் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை நிகழ்த்தி உள்ளனர். அதேசமயம், இந்த சாதனையை மிகக் குறைந்த வயதில் நிகழ்த்திய இந்திய கேப்டனாக சுப்மன் கில் (25 வயது) உருவெடுத்துள்ளார்.
டான் பிராட்மேனை முந்திய ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 159 பந்துகளில் 101 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் அவர் குவித்த ஸ்கோர் 813 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஜெய்ஸ்வாலின் சராசரி ரன் குவிப்பு 90.33. அபாரமான தனது பேட்டிங் திறனால், ஜெய்ஸ்வால், கிரிக்கெட் உலகின் பழம்பெரும் ஜாம்பவான் வீரர் டான் பிராட்மேனை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார். மறைந்த ஆஸி ஜாம்பவான் பிராட்மேன், இங்கிலாந்து அணிக்கு எதிராக 63 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஆடி, 5028 ரன் குவித்துள்ளார். அவரது சராசரி ரன் குவிப்பு, 89.78 ரன். அந்த சாதனையை முறியடித்துள்ள ஜெய்ஸ்வால், இங்கிலாந்து அணிக்கு எதிராக 90 ரன் சராசரியை கடந்த முதல் வீரராக உருவெடுத்துள்ளார்.
தோனியின் சாதனையை முறியடித்த பண்ட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில், இந்திய அணியின் 3வது விக்கெட் விழுந்த பின் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், அநாயாசமாக ஆடி 146 பந்துகளில் சதம் விளாசினார். அதில், 6 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் அடக்கம். அந்த சதம், டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டின் 7வது சதமாகும். இதன் மூலம், இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் விளாசியிருந்த எம்.எஸ்.தோனியின் (6 சதங்கள்) சாதனையை பண்ட் தகர்த்தெறிந்துள்ளார். மேலும், 4வது விக்கெட்டுக்கு கேப்டன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து, 209 ரன்கள் குவித்து, அணியை வலுவான நிலைக்கு உயர்த்திய வீரராகவும் அவர் திகழ்ந்தார்.