ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர் கதையாக நீடிக்கிறது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக்கில் உள்ள அஹர்லான் கக்மன்டு வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ சிறப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவ சிறப்பு படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த பயங்கர மோதலில் சிறப்பு ராணுவ படை வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.