காஷ்மீர்: காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது மோட்டார் குண்டுகளை ராணுவம் வீசுவதால், தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடும் வீடியோ வைரலாகி உள்ளது. ஜம்மு – காஷ்மீரின் தெற்கு காஷ்மீர் மாவட்டம் கோகர்நாக் அடுத்த கடோல் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில், இந்திய ராணுவத்தின் 19 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்பிரீத் சிங், ஜம்மு காஷ்மீர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மேஜர் ஆஷிஷ் தோச்சக் உள்ளிட்ட 4 பேர் அடுத்தடுத்து வீரமரணம் அடைந்தனர்.
தீவிரவாதிகளின் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அனந்த்நாக்கில் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை தேடும் பணியில், தொடர்ந்து 4வது நாளாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாங்கான காடுகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகள், தற்போது அவர்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் அவர்கள் அங்கும் இங்கும் ஓடுவதை பார்க்க முடிகிறது. இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆளில்லா விமானத்தின் மூலம் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் மீது பாதுகாப்புப் படையினர் மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இது தவிர அப்பகுதியை பாதுகாப்பு படையினர் முழுமையாக சுற்றி வளைத்துள்ளனர். விரைவில் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்’ என்று கூறின.