புதுடெல்லி: ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 அரசுப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் அரசு ஊழியர்களாக பணியாற்றி வருகின்ற மாலிக் இஷ்ஃபாக் நசீர் (காவல் கான்ஸ்டபிள்), அஜாஸ் அகமது (பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்), வசீம் அகமது கான் (ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை உதவியாளர்) ஆகிய மூவரும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 311(2)(சி) பிரிவின் கீழ், மாநில பாதுகாப்பிற்கு அவசியமெனக் கருதி விசாரணையின்றி பணி நீக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை இதன் மூலம் 83 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2007ல் பணியில் சேர்ந்த வசீம் கான், 2018 ஜூன் 14ல் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி மற்றும் அவரது இரு பாதுகாவலர்களின் படுகொலைக்கு பின்னால் இருந்த சதித்திட்டத்தில் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்டில் தீவிரவாதத் தொடர்பு விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2007ல் பணியில் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் மாலிக் இஷ்ஃபாக் நசீர், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பாகிஸ்தான் பயிற்சி பெற்ற தீவரவாதியின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டு, 2021 செப்டம்பரில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தல் விசாரணையில் அவரது தொடர்பு வெளிப்பட்டது. கடந்த 2011ல் ஆசிரியராக பணியில் சேர்ந்த அஜாஸ் அகமது, பூஞ்சில் ஹிஸ்புல் முஜாகிதீனுடன் இணைந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேற்கண்ட மூவரின் பணி நீக்கங்கள், ஏப்ரல் 22ல் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.