புதுடெல்லி: இந்தியா சார்பில் ‘உலக தெற்கு நாடுகளின் குரல்’ 3வது உச்சி மாநாடு மெய்நிகர் வாயிலாக நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, உலக தெற்கு நாடுகளின் தலைவர்களிடம் பேசியதாவது: உலகெங்கிலும் நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது. கொரானோ தாக்கத்தில் இருந்து உலகம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இதற்கிடையே போர்களும் நமது வளர்ச்சிக்கு புதிய சவால்களாக மாறி உள்ளன. தீவிரவாதம், பிரிவினைவாதம் நமது சமூகங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய பொருளாதார, சமூக சவால்களும் உருவாகி வருகின்றன. எனவே, உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து, ஒரே குரலில் ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் பலமாக மாறுவது காலத்தின் தேவை.
நாம் நமது அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்வோம். முக்கிய சவால்களை கையாள்வதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலக தெற்கு நாடுகளின் குரல் என்பது இதுவரை கேட்கப்படாதவர்களின் தேவைகள், விருப்பங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு தளமாகும். நமது பலம் நமது ஒற்றுமையில் உள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த ஒற்றுமையின் சக்தியுடன் புதிய திசை நோக்கி நாம் நகர்வோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (டிபிஐ) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சமூக தாக்க நிதியத்திற்கு ரூ.200 கோடியை இந்தியா தனது ஆரம்ப பங்களிப்பதாக வழங்குவதாகவும் மோடி அறிவித்தார்.