கொல்கத்தா: இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.69,420 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டது. சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் இன்று காலை கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இதற்காக சிக்கிமின் காங் டாக்கில் மிகப்பெரிய அளவில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி ஒரு மணிநேரம் முன்னதாக காலை 10 மணிக்கே தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென்று மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ராவிலிருந்து இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது; சிக்கிம் மாநிலம் உதயமான 50வது ஆண்டு விழாவில் பங்கேற்க விரும்பினேன். ஆனால் வானிலை அங்கு வரவிடாமல் செய்து விட்டது. மாநிலம் உதயமாகி 50வது ஆண்டுகள் ஆவதையொட்டி சிக்கிம் மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிக்கிம் இமயமலையின் மாநிலம் அது “நாட்டின் பெருமை” அந்த மாநிலத்தின் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். சிக்கிம் இயற்கை பாதுகாப்பில் முன்மாதிரியாக உள்ளது. கடந்த மாதம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சரியான பதிலடி. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாடு ஒன்றுபட்டுள்ளது. இந்தியா வல்லரசாக மாற்றுவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. சிக்கிம் இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது. இது மாநிலத்திற்கு கிடைத்த ஒரு பெரிய சாதனை ஆகும். இவ்வாறு பிரதமர் கூறினார்.