ஈரோடு: ஈரோடு மாநகராட்சி குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டிருந்த மக்காத குப்பையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இயந்திரங்கள், மேற்கூரை எரிந்து சேதமானது. ஈரோடு மாநகராட்சியில் தினசரி 180 டன் முதல் 200 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 70 டன் முதல் 80 டன் வரை மக்காத குப்பை வைரபாளையத்தில் உள்ள கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையை நுண்ணுயிர் கிடங்குகளில் இயற்கை உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மக்காத குப்பை வைரபாளையத்தில் உள்ள கிடங்கில், அதிக வெப்பநிலையில் எரியூட்டப்பட்டு வெளியேறும் சாம்பலில் இருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்புவதற்காக குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைராபாளையம் கிடங்கில் மக்காத குப்பையில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்கும் தீ பரவியதால், இயந்திரங்கள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்தது. உடனடியாக பணியாளர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் குப்பையை அகற்றி தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வைராபாளையம் குப்பைக் கிடங்கில் இருந்து மக்காத குப்பையை எரித்து அதிலிருந்து வெளியேறும் சாம்பல், சிமெண்ட் மற்றும் கற்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அதிக வெப்பநிலை காரணமாக இக்கிடங்கில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான எரியூட்டப்படும் இயந்திரத்தின் பெல்ட் சேதமானது. கூரையும் சேதமானது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.