குன்றத்தூர்: மாங்காடு அருகே குடியிருப்பு மத்தியில் கொட்டப்பட்டிருந்த கழிவு பொருட்களில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் கவர்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள், குடியிருப்புகளுக்கு மத்தியில் மலைப்போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குடியிருப்புகள் மத்தியில் கொட்டப்பட்டிருந்து கழிவு பொருட்கள் நேற்று காலை திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் தொட்டிகள் உடைந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவமாக உயிர் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது.
இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தனியார் தொழிற்சாலையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு பொருட்களை, குடியிருப்புகளுக்கு மத்தியில் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. எனவே, மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க, குப்பை கழிவுகளை குடியிருப்பு அருகே கொட்டுவதை தடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே குவிந்து கிடக்கும் குப்பைகளையும் உடனடியாக அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.