*பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம்
திருப்பூர் : திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் அமர் ஜோதி நகரையைச் சேர்ந்த ஷரிப் (46) என்பவர் 3 மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார்.
பனியன் துணிகள் தைக்கும் போது கிடைக்கும் சிறிய துண்டுகளை மீண்டும் பஞ்சாக மாற்ற அனுப்பி வைக்கும் குடோனாக நடத்தி வருகிறார். இந்த குடோனில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குடோன் முழுவதும் துணிகள் இருந்ததன் காரணமாக தீயை அணைப்பது சவாலாக இருந்தது. ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் கட்டிடத்தின் பின்பக்க சுவர்கள் உடைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் உதவியுடன் 6 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தொடர்ந்து புகைச்சல் இருப்பதால் அணைக்கும் பணி நடந்தது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் வேஸ்ட் துணிகள் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.