பரமத்திவேலூர் அருகே மீண்டும் பதற்றம் 1,200 வாழை, பாக்கு மரங்கள் அடியோடு வெட்டி சாய்ப்பு: கிராம மக்கள் அதிர்ச்சி; எஸ்பி விசாரணை

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே, 1,200 வாழை மற்றும் பாக்கு மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பி நேரடி விசாரணை நடத்தினார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தை அடுத்த கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மனைவி நித்யா(27), கடந்த மார்ச் 11ம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற போது, மர்ம நபர்களால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜேடர்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில், தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்தன. வெல்ல உற்பத்தி ஆலைகளில் தீ வைக்கப்பட்டது. ஏராளமான வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. தனியார் வெல்ல ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைக்கு தீ வைத்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அசம்பாவித சம்பவங்கள் குறித்து, விசாரணை நடத்திய போலீசார், இதுதொடர்பாக நித்யாவின் உறவினர்கள் 10 பேரை கைது செய்தனர். இதையடுத்து, அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஜேடர்பாளையம் அடுத்துள்ள கொத்தமங்கலம் அருகே வக்கீல் சுப்பிரமணிக்கு(68) சொந்தமான தோட்டத்தில், 200 பாக்கு மரக்கன்றுகளை மர்ம நபர்கள் அடியோடு வெட்டி சாய்த்துள்ளனர். அதே பகுதியில் உள்ள தர்மலிங்கம்(54) தோட்டத்தில், 1,200 வாழை மரங்களும் வெட்டி சாய்த்துள்ளனர். இதேபோல், நல்லசிவம் மற்றும் ஒரு விவசாயி தோட்டத்திலும் மர்ம நபர்கள் வாழை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். நேற்று காலை, அதனை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன், ஏடிஎஸ்பி ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இயல்பு நிலை திரும்பி சில வாரங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் அசம்பாவிதங்கள் நடந்துள்ளது அப்பகுதியில் பொதுமக்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ.25 வரை உயர்வு: ஏப்ரல் 1ம் தேதி அமல்

ஐபிஎல் 4வது லீக் போட்டி டெல்லி அசாத்திய வெற்றி: அசுதோஷ் சர்மா விஸ்வரூபம்

சட்டப்பேரவைக்கு கையில் கட்டுடன் வந்த செல்வபெருந்தகை